TEST

Wednesday, November 25, 2009

டெஸ்ட்

Read more...

Monday, November 16, 2009

...ஊருக்குப் போறோம்!


பண்ருட்டி வந்தவுடன், ஊருக்கே போய்விட்ட சந்தோஷம் கிட்டி விடும் - அதுவும், குடத்தை கையில் ஏந்திக்கொண்டு தண்ணீர் ஊற்றுகிற பாவனையில் பெண்கள் இருபுறமும் நிற்குமாறு கட்டப்பட்ட அந்த வளைவு/ஆர்ச் - 'அப்பாடா, வடலூர் வந்துவிட்டது' என்ற நிம்மதி!! 'நெய்வேலி உள்ளே போகுமா' என்று கேட்டுவிட்டு வடலூர் பஸ் பார்த்து ஏறி அமர்ந்தால் பலாபழ கூடைகளுடனும், முந்திரி கூடைகளுடனும் நம்மை மொய்க்கத் துவங்குவார்கள்! பெரும்பாலும், குட்டிபசங்கள் ஜன்னலோரத்தில் அமர்ந்தால் பலாபழத்தை பேப்பரில் வைத்து மடியில் போட்டு விடுவார்கள்...நான் ஆயாவை பார்ப்பேன் - அவர் 'வேணாம்மா' என்றாலும் விற்கும் நபர்கள் திணிப்பார்கள் - 'கீரைக்காரம்மாவிற்காக கீரை வாங்கும்' ஆயா இந்த பலாப்பழ ஆளுக்காக பலாப்பழம் வாங்குவார். ..அது இரண்டு அல்லது மிஞ்சி போனால் இரண்டரை ரூபாய்! இன்றைக்கு பத்து சுளைகள் பத்துருபாய்.சாப்பிட்டபின் பலாப்பழ கொட்டைகளை கண்டிப்பாக கோன் மாதிரி செய்து வைத்திருக்கு பேப்பரில் போடவேண்டும், அது அத்தையிடம் கொடுத்து அடுத்த நாள் சாம்பாரில் போடப்படும்!!

பண்ருட்டி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது முந்திரி மரங்களும், பிஞ்சு பிஞ்சாய் தொங்கும் பலாமரங்களும்தான். அதுவும் அந்த செம்மண் கலர் இருபுறங்களிலும் பார்க்க மிகவும் பிடிக்கும்!போர்வையால் மேலே போர்த்தி கட்டிலுக்கு கீழே வீடு விளையாட்டு விளையாடும் எனக்கு, கவிந்து பரவிக்கிடக்கும் முந்திரி மரங்களுக்குள்ளே வீடு விளையாட்டு விளையாட மிகவும் ஆசையாக இருக்கும்!ஆனால் ஆயா அங்கு பெரிய பாம்புகள் இருக்குமென்று சொல்வார்! சாலையின் இருபுறமும் இருக்கும் செம்மண் மழைக்குக் கரைந்து வித்தியாசாமான வடிவங்களில்ம் மேடுகளாக பள்ளங்களாக இருக்கும் - அதை ஒரு க்ராண்ட் கான்யனாக உருவகப்படுத்திக்கொள்வேன்! தண்ணீர் அரித்து ஓடியிருக்கும் குட்டி க்ராண்ட் கான்யன்!! அதுவும் பண்ருட்டியில் ஒரு இடத்தில் மகா கெட்ட வாசனையொன்று வரும்...அது வந்தால் முக்கை பொத்திக்கொண்டு வாயால் சுவாசிப்பேன்/அல்லது மூச்சை இழுத்துபிடித்துக்கொள்வேன்! அது ஒரு சாராய பேக்டரி - ஆனால் அது வந்துவிட்டால் வடலூர் நெருங்கிவிட்டது என்று அர்த்தம்! மழைநீர் தேங்கியிருக்கும் செம்மண் குழிகள் - வீடு விளையாட்டில் செங்கல்லை அரைத்து நாங்கள் வைக்கும் சாம்பார் வைப்பதை நினைவூட்டும்!! மண்ணைக்குவித்து அதன் தலையில் நீர் ஊற்றினால் அந்த இடம் ஈரமாகி குழிந்திருக்கும் - அதை கீழாக நோண்டிஎடுத்தால் அதுதான் இட்லி. உடனே விளையாட மனம் ஆயத்தமாகும்! இன்னும் ஒருமணி நேரமே..வடலூர் வந்துவிடும். நிலைகொள்ளாது அதன்பின் - ஆம்பூரில் கற்றுக்கொண்ட விளையாட்டுகளை வடலூரிலும், வடலூரில் கற்றுக்கொண்டதை ஆம்பூரிலும் அல்லவா பரிவர்த்தனம் செய்துக்கொண்டிருந்தேன்! எனக்கு தெரிந்த அரிய பெரிய வித்தைகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டிருப்பேன்!

உங்களை எங்கே விட்டேன்...சாராய பேக்டரி...இப்போது ரயிலே கேட் அருகில் வந்துவிட்டோமே!! அப்புறம் ஒரு பெரிய புளியமரம் ..அதனருகில், முகப்பில் டீ கடைகொண்ட குடிசை வீடுகள் - அதைத்தாண்டினால் பீங்கான்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் - அவை தொப்பியை கவிழ்த்து வைத்த வடிவில் இருக்கும்.மேலே சொரசொரப்பான பகுதி. அதை எங்குதான் உபயோகிப்பார்களென்று இன்றும் எனக்கு தெரியாது. அப்புறம் நீள வடிவில் குழாய்கள் - அவை நெய்வேலியிலிருந்து தண்ணீருக்காக. அதையடுத்து, சேஷசாயி பேப்பர் மில்ஸ். தொடர்ந்து, கடைகள் ஆரம்பிக்கும்.பெயர்கள் எல்லாமே பெரும்பாலும் வள்ளலார் என்றுதான் தொடங்கும்....வள்ளலார் காபி கடை, வள்ளலார் ஓட்டல்..வள்ளலார் சலூன்....பஸ் வந்ததுமே பிஞ்சு வெள்ளரிக்காய் எடுத்துக்கொண்டு மொய்க்க ஆரம்பித்துவிடுவர் மக்கள்...பஸ் கூடவே ஓடி வரும் அவர்கள் லாவகம் மிகுந்த வியத்தலுக்குரியது!! ஆனால் வாங்க மாட்டோம்...அதான் ஊர் வந்துவிட்டதே...மறக்காமல் செருப்பை மட்டிக்கொண்டு...இறங்கி நடந்தால்...

நான்குமுனைச் சாலை.வடலூரில் ஜனநெருக்கடி கொண்ட ஒரே சாலை. ஒரு புறம் பண்ருட்டி செல்ல, அதனெதிர் புறம் சிதம்பரம் செல்ல, அதன் பக்கத்தில் நெய்வேலி செல்ல,அதனெதிர்ல் கடலூர் செல்வதற்கு! இங்கும் கெஸ்ஸிங் விளையாட்டு ஒன்று நடக்கும் என் மனதிற்குள்! ஒவ்வொரு முறையும் இறங்கி்ய பின் 'அந்த ரோடில் சென்றால் தான் வீடு வரும்'என்று நினைத்துக்கொண்டிருப்பேன்..ஆனால் அதில் சென்றால் வேறு யாராவது வீட்டுக்குத்தான் செல்லவேண்டிருந்திருக்கும்!சரி, அடுத்த முறை சரியாக கெஸ் செய்யவெண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, ஆயா க்ருஷ்ணா பேக்கரியின் முன் நிற்பார் - ரஸ்க், ஜாம் பிஸ்கட், கேக், க்ரீம் அடைக்கப்பட்ட கோன் (மேலே செர்ரி இருக்குமே), பேக்கரிகளில் மட்டும் கிடைக்கும் பிஸ்கட் (அதனை எனது பெரியகுளத்து தோழி 'சூஸ்பெரி' என்பாள்) எல்லாம் இரண்டு செட்(பெரிய மாமாவீட்டுக்கு/சின்னமாமா வீட்டுக்கு) வாங்கியபின் பூக்காரம்மா ஸ்டாப்...தாமரை இலையில் வைத்து நூல்கட்டி கொடுப்பார். வாங்கியபின் நடக்க வேண்டும்..ஒரு கிமீ.ஆட்டோக்கள் அரிது...புளியமரங்களில் எண்கள் எழுதியிருக்க அதை எண்ணிக்கொண்டு லாம்ப் போஸ்ட் எங்கே வருகிறதென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தால் - ஆயாவை கண்டுக்கொண்ட ஒன்றிரண்டு பெரியவர்கள் , ‘இப்போதான் வர்றீங்களா, மக வயித்து பேத்தியா'என்று சில விசாரிப்புகள். கடந்து வந்தால் வீடு வந்திருக்கும். இருட்டவும் ஆரம்பித்திருக்கும்.

அப்புறம், (பெரிய/சின்ன) மாமா-அத்தை,தம்பி,புழு என்ற புகழேந்தி, கயலு, பஜ்ஜி என்ற விஜி, மகேஷ் எல்லாம் பார்த்தபின் சோர்வாவது ஒன்றாவது! ஒளிந்து பிடித்து,கோ கரண்ட், கல்லா மண்ணா என்று ஆட்டம் தொடங்கும். அப்புறம், யானை மேலே குதிரை மேலே சிங்கம் மேலே டூ கா...துபாய்லேர்ந்து துப்பாக்கி எடுத்துட்டு வந்து சுடுவேனென்றும், பம்பாய்லேர்ந்து பாம்பை உன் மேலே விடுவேன் என்றும் சிங்கப்பூர்லேர்ந்து சிங்கத்தை விட்டு கடிக்க விடுவேன்றும், ரஷ்யாலேர்ந்து ராக்கெட்டை உன் மேலே உடுவேன்றும் பெனாத்திக்கொண்டிருக்க அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் வந்து சேர....திரும்ப அதே ஜாலி,கலவரம்,கிலி்.. அதே டவாலி, பைகள் சகிதம்....பட்டுக்கோட்டை/பெரியார்/திருவள்ளுவர், பண்ருட்டி டூ திருக்கோவிலூர் டூ திருவண்ணாமலை டூ வேலூர் டூ ஆம்பூர்!!

Read more...

Read more...

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Lilypie Fifth Birthday tickers

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது


தமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..





About This Blog

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP